மகாராஷ்டிரா ஆரம்ப சுகாதார நிலையம்

மும்பை

மகாராஷ்டிரா மாநில அரசு கிராமத்தில் பணி புரிய மறுத்த 4548 மருத்துவர்களின் பதிவை நீக்கி உள்ளது.

மருத்துவர்கள் தங்களின் மருத்துவப் படிப்பு முடிந்ததும் அரசிடம் பதிவு செய்துக் கொண்ட பின்னரே மருத்துவராக பணி ஆற்ற அல்லது தொழில் செய்ய முடியும்.  மகாராஷ்டிரா அரசின் ஆணைப்படி அவ்வாறு பதிவு செய்துக் கொண்ட மருத்துவர்கள் குறைந்தது ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் பணி ஆற்ற வேண்டும்.  இதற்காக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் மற்றும் மற்றும் அலவன்சுகளை வழங்கி வருகிறது.

ஆனால் பல மருத்துவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை.  இதற்காக சில மருத்துவர்களுக்கு மெடிகல் கவுன்சில் அபராதமும் விதித்துள்ளது.  அந்த அபராதத் தொகையையும் யாரும் செலுத்தவில்லை.  இதனால் மகாராஷ்டிரா மாநில மெடிகல் கவுன்சில், கிராமத்தில் பணி புரிய மறுத்த 4584 மருத்துவர்களின் பதிவை நீக்கி உள்ளது.  இதனால் அவர்கள் மருத்துவர்களாக பணி ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் சாகர் முண்டாலா, “மருத்துவர்களுக்கு ஊதியமோ அலவன்சோ பிரச்சினை இல்லை,  ஆனால் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன.   தேவையான மருந்து வசதிகளும் இருப்பதில்லை.  கிடைக்கும் மருந்துகளும், மருத்துவ வசதிகளும், மிகவும் குறைந்த அளவிலும், தரமற்றதாகவும் இருக்கின்றன.

அது தவிர மருத்துவர்களுக்கு தங்க அளிக்கப்பட்ட வீடுகளும் வசதியற்றதாக உள்ளன.  அரசு தனது கடமையான மருந்து மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதில் அக்கறை காட்டாத போது மருத்துவர்களை இது போல நடத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது.  எந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிறு அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் கூட இருப்பதில்லை.  இதனால் மக்களிடம் மருத்துவர்கள் தான் கெட்ட பெயர் வாங்குகிறார்கள்.  அதனால் தான் எந்த மருத்துவரும் கிராமத்தில் பணி புரிய ஒப்புக் கொள்வதில்லை.” எனக் கூறி உள்ளார்.