மும்பை

மும்பை சட்டமன்ற வளாகத்தில் எலிகளை ஒழிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டணம் வசூலித்த நிறுவனம் செயல்படாத நிறுவனம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மும்பை சட்டமன்ற வளாகத்தில் எலிகளை ஒழிக்க விநாயக் மஜூர் சககாரி சந்தா என்னும் நிறுவனத்துக்கு நகரில் உள்ள எலிகளை ஒழிக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.   அந்த நிறுவனத்துக்கு  ஒரு எலியை அழிக்க  ரூ.1.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அந்தக் கட்டணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான ஏக்நாத் காட்சே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளார்.  அவர், “இந்த தனியார் நிறுவனம் சட்டப்பேரவை வளாகத்தில் 7 நாட்களில் 3,19,400 எலிகளை அழித்துள்ளது.  இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஒர் எலிக்கு ரூ.1.50 வீதம் கட்டணம் வழங்கப்பட்டதாக தெரிய வந்துளது”  என சட்டப் பேரவையில்  தெரிவித்துள்ளார்.

மேலும் காட்சே இது குறித்து, “இந்த ஒப்பந்தம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டு பிறகு அது இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.   ஆனால் அந்த நிறுவனம்  45,628.57 எலிகளை கொன்றுள்ளது.   அதில் 0.57 என்பதை புதிதாக பிறந்த எலிகள் என வைத்துக் கொள்வோம்.   அதாவது அந்த நிறுவனம் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 31.68 எலிகளை கொன்றுள்ளது.

அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் அவைகளின் எடையை கணக்கிடும் போது ஒவ்வொரு நாளும் ஒரு லாரி நிறைய இறந்த எலிகள்  எடுத்துச் செல்லப்பட்டிருக வேண்டும்.  அப்படி எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் அந்த எலிகளை விட்டு எறிய மும்பையில் இடமே இருந்திருக்காது” என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.  அவருடைய இந்த தகவலால் சட்டப்பேரவையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

அத்துடன் அவர், “மும்பை மாநகராட்சி மும்பை முழுவதும் உள்ள 6 லட்சம் எலிகளை அழிக்க இரண்டு வருடம் எடுத்துக் கொண்ட நிலையில் இந்த நிறுவனம் தரும் தகவல் பொய்யானது”  எனவும் கூறினார்.

இது குறித்து மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.   விநாயக் மஜூர் சககாரி சந்தா நிறுவனம் அந்த குறிப்பிட்ட விலாசத்தில் இல்லை.  அந்த நிறுவனத்தின் இயக்குனர் அமோல் செட்கே 2008ஆம் வருடம் மறைந்து விட்டார்.  அதன் பிறகு இந்த நிறுவனத்தை யார் நடத்துகிறார்கள் என்னும் விவரம் தெரியவில்லை.   இது குறித்து அமோல் செட்கேவின் சகோதரர் யாராவது தமது சகோதரரின் போலிக் கையெழுத்தின் மூலம் இந்த ஒப்பந்தத்தை பெற்றிருக்கலாம் என கூறி உள்ளார்.