மும்பை வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்: பயணிகளை மீட்கும் பணி தீவிரம்

Must read

மும்பை:

மும்பையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந் துமழை பெய்துவரும் நிலையில், நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், பஸ், ரயில் போன்ற வாகன போக்குவரத்தும் அடியோடு முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தண்டவாளத்தில் ஓடிய  வெள்ளம் காரணமாக, மும்பைக்கு வந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கியது. இதையடுத்து, ரயிலில் பயணம் செய்த சுமார் 700க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்கும் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்,  காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில்,  பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களாக மழை கொட்டி வருகிறது.  நேற்று மும்பை மற்றும் புறநகரில்  கனமழை பெய்தது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதன் காரணமாக  ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.

ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோரேகான், அந்தேரி, பாந்த்ரா, சயான், மாடுங்கா போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
வடாலா, தாதர், குர்லா, செம்பூர், நவிமும்பை உள்ளிட்ட இடங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. சயான்-பான்வெல் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரயில்நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் தாமதமாக வந்து சென்றன. தொடர்ந்து மழை பெய்ததால் 17 விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.

இந்த நிலையில்,  மும்பை மற்றும் கொல்ஹாபூர் இடையே செல்லும் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தானே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. மும்பையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் பட்லபூர் – வங்கனி இடையே உல்ஹாஸ் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது.

இன்று காலை 3 மணி முதல் ரயில் அவ்விடத்திலே நிற்கும் நிலையில் உள்ளிருக்கும் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ரயில் தண்டவாளங்கள் முழுவதும் நீரால் சூழ்ந்துள்ளது. சுமார் 700 பயணிகள் அதில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ரயில் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி அளவி லான தகவல்படி சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு மணி நேரத்திற்குள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீட்கப்பட்டு படகில் அழைத்து வரப்படும் ரயில் பயணிகள்

இதற்கிடையே,  ரயில் பயணிகள் வெளியிட்டுள்ள பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில், 15 மணி நேரத்திலிருந்து தங்களுக்கு குடிநீர் அல்லது உணவு இல்லை என்றும், அனைத்து வழிகளிலும் ஐந்து-ஆறு அடி நீரில் ரயில் நடைமுறையில் துண்டிக் கப்பட்டுள்ளதால் தப்பிக்கும் பாதை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரெயில் பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More articles

Latest article