உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர்.
இதையடுத்து நீரின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நிபுணர் உறுப்பினர் ஏ. செந்தில் வேல் ஆகியோர் அடங்கிய NGT முதன்மை பெஞ்ச், பிரயாகராஜில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகளின் தரம் குறித்த மனுவை விசாரித்தது.
மகாகும்பமேளாவின் போது பிரயாகராஜில் ஏராளமான மக்கள் ஆற்றில் குளித்ததால், மலம் செறிவு அதிகரித்து பல்வேறு இடங்களில் கழிவுநீராக மாறியுள்ள ஆறு குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று விசாரணையின் போது கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) சமர்ப்பித்த அறிக்கையில், “நதி நீரின் தரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் மலக் கோலிஃபார்ம் [FC] தொடர்பாக குளிப்பதற்கான முதன்மை நீர் தரத்துடன் ஒத்துப்போகவில்லை” என்று கூறியுள்ளது.
“உத்தர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB ) கடந்த ஜனவரி 28, 2025ல் அனுப்பிய ஆவணங்கள் மூலம் பிரயாகராஜின் பல்வேறு இடங்களில் அதிக அளவு மலம் மற்றும் மொத்த கோலிஃபார்ம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பான விரிவான அறிக்கை எதையும் UPPCB தாக்கல் செய்யததைக் கண்டித்த பசுமைத் தீர்ப்பாயம், சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகுமாறு உத்தரவிட்டு இதன்மீதான விசாரணையை பிப்ரவரி 19 க்கு ஒத்திவைத்துள்ளனர்.