பெங்களூர்,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும்  சசிகலாவின்  அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

அவரது  இறுதிச் சடங்குக்கு சசிகலா வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த வேளையில், பரோலில் வர சசிகலா மறுப்பு தெரிவித்து விட்டதாக பெங்களூரு சிறைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் (வயது47). இவர் நேற்று காலை திருவிடைமருதூரில் உள்ள கோவிலுக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து மகாதேவன் மரணம் குறித்து சிறையில் இருந்த சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கட்சியின் கர்நாடக அதிமுக மாநில செயலாளர் புகழேந்தி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலுக்கு சென்று சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மூலமாக மகாதேவன் மரணம் அடைந்த தகவலை கடிதத்தின் மூலம் சசிகலாவிடம் தெரிவித்தார்.

ஆனால், சசிகலா பரோலில் வர மறுத்துவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

மகாதேவன்  இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா விரும்பவில்லை. அவர்  தரப்பில் பரோல் எதுவும் கேட்கவில்லை. அவர் பரோல் கேட்டிருந்தால் சிறைத்துறை விதிகளின்படி பரிசீலித்து முடிவு எடுத்து இருப்போம் என்றார்.