சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதுதொடர்பாக இன்று இறுதிகட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில்  தகுதி வாய்ந்த குடும்ப பெண்களுக்கு ரூ.1000உரிமைத் தொகை வழங்கும்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் 15ந்தேதி (வெள்ளிக்கிழமை)  அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில், தொடங்கப்படுகிறது. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில், காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.  விழா நடைபெறும் இடம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இதற்கிடையில்,  உரிமைத்தொகை பெறும்,  பயனாளிகளை தேர்வு செய்ய, இதற்காக கடந்த ஜூலை இறுதியில் இருந்து அக்.16-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. இடையே, தகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, முதியோர் உதவித்தொகை பெறும் குடும்பங்கள், மாற்றுத்தினாளிகள் உதவித்தொகை பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் அரசிடம் உள்ள வருமான வரித்துறை, மின்துறை, போக்குவரத்துத் துறை உள் ளிட்ட பல்வேறு துறைகளின் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இதில், சந்தேகம் ஏற்படும் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளது.

இந்த திட்டத்தின்படி, ஒரு கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கபட்டு அதற்கான நிதியாக நடப்பு நிதி ஆண்டுக்கு மட்டும் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பங்களை சரிபார்த்த போதும் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் பயனாளர்கள் பட்டியலில் வருவார்கள். மாதம் 1000 ரூபாய் விண்ணப்பதாரர்கள் வழங்கிய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று   இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபடுகிறார். தலைமைச் செயலகத்தில்  ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இன்றைய  ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் மற்றும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

15ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ள இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்து தொடர்பாக ஏற்கனவே பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ள முதல்வர், இன்று மேலும் பல ஆலோசனைகளை வழங்குவார் என தெரிகிறது. மேலும், விண்ணப்பித்தவர்களில் தகுதிப் பட்டியலில் எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இத்திட்டத்திற்காக ஐடி கார்டு ஒன்றை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்கள் புகைப்படம், பெயர், எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்கிறார்கள். இதுதொடர்பாகவும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.