மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி இன்று முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே கடந்த 2015ம்ஆண்டு பெய்த கனமழையின்போது, ஏரி நிரம்பி அந்த பகுதி மக்களை பயமுறுத்திய நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஏரி முழு கொள்ளவை எட்ட உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில்,  செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல ஏரிகள் நிரம்பி வருகின்றன.

இந்த மவாட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 528 ஏரிகள் உள்ளன. இந்த ஏரி களில், திருப்போரூர் வட்டம் – தையூர் பெரிய ஏரி, திருக்கழுக் குன்றம் வட்டம் – புதுப்பட்டினம் ஏரி, கொடங்கண் ஏரி, நடுவக்கரை, லட்டூர் ஏரி, முடிச்சூர் உட்பட 65 ஏரிகள் முழுமையாக நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் மதுராந்தகம் ஏரிக்கும் தொடர்ந்து நீர் வந்துகொண்டிருப்பதால், ஏரி இன்று முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால், கிளியாற்றில் இருந்து உபரி நீர் வெளியறே்றப்பட உள்ளது.  இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிளியாறு., பாலாறு கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.