மதுரை: மதுரை ரயில் தீ விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்து உள்ளது. இதற்கிடையில் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாத்ரா ரயிலின் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பயணிகள் விதிகளை மீறி, ரயில் பெட்டிகளில் கேஸ் சிலிண்டரைக் கொண்டு சமையல் செய்தபோது, சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிலிண்டர் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீவிபத்து மளமளவென அடுத்தடுத்து நின்ற பெட்டிகளிலும் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் உறங்கிக்கொண்டிருந்தனர். இதனால், பலர் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர்.
இந்த தீ விபத்தில் முதலில் 2 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 20க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் சிலர் பலத்த தீக்காயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக, காவல்துறையினரும், ஆர்பிஎப் போலீசாரும் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து அமைச்சர், ரயில்வே உயரதிகாரிகள், காவல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த ரயில் தீ விபத்து தொடர்பாக பயணிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.