மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவனடியார்களின் பஞ்ச வாத்தியங்கள் முழுங்க, சங்கு நாதம் ஒலிக்க தேரோட்டம் தொடங்கியது. சித்திரை திருவிழா தேரோட்டத்தை காண லட்சக்கணக்கானோர் மதுரையில் குவிந்துள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்களின் விண்ணைப் பிளந்த ‘ஹர ஹர சிவா’ முழக்கத்துடன் தேரை உற்சாகமாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள்.
முதலில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுன் பெரிய தேரில் எழுந்தருளினார். சற்று இடைவெளியில் இரண்டாவதாக, அன்னை மீனாட்சி சிறிய தேரில் எழுந்தருளினார். இந்த தேர்களை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்தை கண்டுகளித்து, அம்மை அப்பனை தரிசித்து அருளாசி பெற்று வருகின்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். 8 வது நாள் நிகழ்ச்சியின்போது, மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது, மதுரையில் மீனாட்சி அம்மன் அரசியாக பட்டம் சூடிக் கொண்டார். அதைத்தொடர்ந்து,
10 வது நாளனை நேற்று ( 21ந்தேதி) நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று இர8வு தங்க கிரீடமும் வைர ஆபரணங்களும் அணிந்த சுந்தரேசுவரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கிலும் மாசி வீதிகளில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். கோயில் யானை முன்னே செல்ல, சிவவாத்தியம் முழங்க, ஆடி வீதிகளில் அம்மனும் சுவாமியும் திருவீதி உலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, 11 ஆவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது, இதை காணவும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளாசி பெறவும் மதுரை மாநகரம் முழுவதும் பல லட்சம் பக்தர்கள் கூடியுள்ளனர், எங்கு காணினும் மனிதர்கள் தலையே காணப்படுகிறது. தேரோட்டைக் காண பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்துள்ளனர். தற்போது மதுரையே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. காலை சரியாக 6.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்லும்போது அவற்றை தொடர்ந்து முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் செல்கின்றது.
முன்னதாக நேற்று (ஏப்., 21) கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில் அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பட்டார். இன்று காலை மதுரை வந்தடைந்த கள்ளழகருக்கு, மதுரை புதுார் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. நாளை (ஏப்., 23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.