மதுரை,
காவிரி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆற்றில் மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பது அரசுக்கு தெரிந்திருந்தாலும், வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, விதிகளை மீறி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
ஆற்று வளம்தான் நாட்டின் வளம் என்பார்கள். அந்த ஆற்றுக்கு மிக இன்றியமையதாது ஆற்றில் இருக்கும் மணல்தான். அதிகபட்சம் மூன்று அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ளப்பட வேண்டும். இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அள்ளப்பட வேண்டும். கரையில் இருந்து 60 அடி தள்ளியே அள்ள வேண்டும். குடிநீர் கிணறு இருக்கும் இடங்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் அள்ள வேண்டும். தரைப்பாலம், மேம்பாலம் இருக்கும் இடங்களில் 100 அடி தூரத்துக்கு மணல் அள்ளக் கூடாது’ என பல விதிகள் உள்ளன.
ஆனால் இதில் எந்த விதிகளை கடைபிடிக்காமல் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முசிறியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் ” மதுரை, குளித்தலை பாலத்துக்குக் கீழ் கட்டுமானப் பணிக்காக மணல் குவாரிகள் மூலம் அதிக அளவு மணல் அள்ளப்படுகிறது, அரசு குறிப்பிட்ட விதிகளை மீறி அதிகப்படியாக மணல் அள்ளப்படுகிறது . இதன் காரணமாக நீரோட்டம் இல்லாமல் போகிறது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்துதான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மணல் அதிகமாக அள்ளுவதால் தண்ணீர் வரத்தும் குறைந்துவருகிறது. எனவே, மணல் அள்ளும் குவாரிகளுக்கு மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து திருச்சி வரை மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், குவாரிகளிலும் மணல் அள்ள தடை விதித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசின் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலர், கரூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .