துரை

மிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வருகின்றனர்.  இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இது குறித்து தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் இந்தியாவை யூனியன் கவர்ன்மெண்ட் எனக் குறிப்பிடப்படுவதால் அதைத் தமிழாக்கம் செய்து ஒன்றிய அரசு என குறிப்பிடுவதாக விளக்கம் அளித்தார்.   ஆயினும் சர்ச்சை ஓயவில்லை.

இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது.

ஆனால் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். இதுபோன்ற வார்த்தையைப் பயன்படுத்தப் பின்புலத்தில் தீவிரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் ஒன்றியம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த முதல்வர், `இந்தியா யூனியன் கவர்மெண்ட் என்று அழைக்கப்படுவதால் அதை ஒன்றிய அரசு என்று கூறுகிறோம். இது ஒன்றும் குற்றமில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதைப் போல் சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் உரையின் இறுதியில்  ஜெய்ஹிந்த் என்னும் வார்த்தை இடம் பெறவில்லை.  அத்துடன் இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து நடவடிக்கை எடுக்கத் தலைமைச் செயலரிடம் மனு அளித்தேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தமிழக அரசு ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.  இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்- ஆனந்தி ஆகியோரின் அமர்வு, “நீதிமன்றமும் அரசும் கொரோனா தடுப்பூசி போடுங்கள் என பொது மக்களை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதும், போடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை.

இதைப் போல இந்திய அரசு அல்லது பாரத் என்று அழைப்பதற்கும், சட்டமன்றத்தில் இதுதான் பேச வேண்டும் எனவும் தமிழக முதல் அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இது அவர்களின் தனிப்பட்ட உரிமை” என அறிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.