மதுரை: மதுரையில் சாலையோரங்களில் தேங்கிய மணலால் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில், 86 கிலோ மீட்டர் சாலையில், சுமார் 2.25 லட்சம் கிலோ வண்டல் மண் அகற்றி மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதிகளிள் உள்ள சாலையோரங்களில் மணல் தேங்குவதால், வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், பல இடங்களில் குப்பைகளை வாரும் பணியாளர்கள், மணலை அகற்றுவது இல்லை. இதனால், பல பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும், சாலையோரங்களிலும் மணல் குவியலாக காணப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பின்னால் வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மதுரையின் சாலைகளிலும் இதுபோன்ற தேங்கி மணலை அள்ள மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, நீடித்து வரும் சாலையோரம் தூர்வாரப் படாத வண்டல் மண் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மதுரை மாநகர சாலையோரங்களில் தேங்கிய மணலை அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோர மணலை அகற்றும்வ கையில் 4 நாட்கள் சிறப்புப் பணி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி, பிப்ரவரி 2ந்தேதி அன்று மதுரை பொன்மேனி பகுதியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா கொடி அசைத்து, பணிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் முன்னிலை வகித்தாா். மேலும் மாநகராட்சி துணை ஆணையா் சரவணன், உதவி நகா்நல அலுவலா் பூபதி, மாநகராட்சி அலுவலா்கள், தன்னாா்வ அமைப்பினா் கலந்து கொண்டனா்.
சாலையோர மணல் அகற்றும் பணியில் கல்லூரி மாணவா்கள் 300 போ், 400 தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டனா். மேலும், நவீன இயந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் 27.9 கி.மீ. உள்பட மொத்தம் 86.1 கிமீ நீளமுள்ள சாலையில் பணிகள் நடைபெற்றன. இதில், சுமார் 2.25 லட்சம் கிலோ வண்டல் மண் அகற்றப்பட்டது என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.