டெல்லி: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2026க்குள் முடிவடையும் என  திமுக எம்.பி. கதிர்ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு மத்தியஅமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மதுரையில் உருவாகும் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ) மருத்துவமனையை வரும் 2026 -ஆம் ஆண்டு அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக  நிதிநிலை அறிக்கையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கிறது” என்று கூறியிருந்தார்.  இதைத்தொடர்ந்தே திமுக எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். 4 ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படம் என்பதே அப்போதைய வாக்குறுதி. ஆனால், கட்டுமானப் பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இந்த மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பானிய யென் மதிப்பில் 22,788,000,000 கடன் ஒப்பந்தம் ஏற்பட்டது (இந்திய மதிப்பில் முன்பு சுமாா் ரூ.1274 கோடியாக இருந்து பின்னா் ரூ.1,627 கோடியாக கடன் தொகை திருத்தியமைக்கப்பட்டது; மீதித் தொகை மத்திய அரசு வழங்குகிறது). இந்த மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், தற்போதுதான் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு   அனுமதி கோரி  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில், தமிழக எம்.பி. கதிர் ஆனந்த் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தார். அதன்படி,  தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியில் காலதாமதம் ஏன்?  எய்ம்ஸ் அமைக்கும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதிகப்படியான கால தாமதத்திற்கான காரணங்கள் யாவை? ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்கிய நிதியின் விவரங்கள் மற்றும் JICA விலிருந்து நிதி பெறுவதில் கால தாமதத்திற்கான காரணங்கள் யாவை? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இதுவரை செலவழிக்கப்பட்ட நிதியின் விவரங்கள் மற்றும் மதுரை எய்ம்ஸ் கட்டப்படும் நேரம்; மற்றும் நாட்டில் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளதா? அப்படியானால், நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட / செலவிடப்பட்ட நிதி விவரங்கள், இடம் வாரியாக தெரிவிக்கவும்?” என்று விரிவாக கேள்வியெழுப்பியிருந்தார்

இதற்கு மத்திய அமைச்சா் பாரதி பிரவீண் பவாா்  எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், சுற்றுச் சுவா் கட்டுவது போன்றவை முடிக்கப்பட்டுள்ளன. திட்ட மேலாண்மைக்கான ஆலோசகா் நியமிக்கப்பட்டு மாஸ்டா் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய சிவில் பணிக்கு தொழில்நுட்பம், நிதி மதிப்பீடு குத்தகைகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வருகின்ற 2026- ஆம் ஆண்டு அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது‘ என தெரிவித்துள்ளார்.