சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 8ந்தேதி வரை நீட்டிப்பு  செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்த நிலையில், இறுதியில் மதுரை அருகே உள்ள தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில்,   2019 ஜனவரியில் எய்ம்ஸ் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.  இதையடுத்து உடனடியாக பணிகள் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், அரசியல் பிரச்சினை மற்றும் வழக்குகள் காரணமாக, எய்ம்ஸ் பணிகள் முடங்கின. அதே காலக்கட்டத்தில் மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எய்ம்ஸ்  கட்டுமான பணிகள்  தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வந்தன. மேலும் வழக்குகளும் தொடரப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 2023ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியது. மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2023ம் ஆண்டு ஆகஸ்டு 17ந்தேதி  மத்திய அரசு டெண்டர் கோரியது. அதன்படி,  செப்டம்பர் 18ஆம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது  மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெண்டரில் குறிப்பிட்டுள்ளபடி, டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கி,   கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  மேலும், 2026ம் ஆண்டு  ஜூன் மாதம்  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுமானப் பணிகளக்கு,  ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் டெண்டர் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.