சென்னை:
கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டன.
2 மாதங்களுக்கு மேலாக அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் விசாரிக்கப்படுகிறது.
சென்னையில் கரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லாத நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படுகிறது. காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நேரடியாகவும், மதியம் 2.30 முதல் 4.45 வரை இரு தரப்பு விருப்பம் தெரிவித்தால் வீடியோ கான்பரன்சிலும் வழக்குகள் விசாரிக்கப்படும்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் தமிழ்செல்வி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனுத்தாக்கல் செய்யும் இடங்களில் கூட்டத்தை தவிர்க்க பிரதான வாயில் அருகே மனு தாக்கல் செய்யும் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு நான்கு பெட்டிகள் வைக்கப்படும். அதில் ரிட் மனுக்கள், குற்றவியல் மனுக்கள், உரிமையில் மனுக்கள், உத்தரவு நகல் வேண்டும் மனுக்களை போட வேண்டும். இந்த கவுண்டர்கள் திங்கள் முதல் வியாழன் வரை 10.30 முதல் 1.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். உத்தரவு நகல் வெள்ளிக்கிழமை மட்டுமே வழங்கப்படும். அவசரமாக உத்தரவு நகல் தேவைப்பட்டால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும் உத்தரவு நகல்களை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்ந்தவர்களின் பொறுப்பாகும்.
நீதிமன்ற உத்தரவு நகல்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அவசர வழக்குகளை மின்னஞ்சலில் தாக்கல் செய்யலாம். நீதிமன்ற அறைகளில் சமூக விலகல் அடிப்படையில் இருக்கைகள் போடப்படும். வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய வேண்டாம். ஆண் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டை, வெள்ளை அல்லது கருப்பு பேன்ட், பெண் வழக்கறிஞர்கள் வெள்ளை சர்வார் கமீஸ், சேலை அணிந்து வர வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். நீதிமன்ற பணிகள் முடிந்ததும் பிற பிரிவுகளுக்கு செல்வதை தவிர்த்து விரைவில் வெளியேற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.