சேலம்:
சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்திய உதவி கமி‌ஷனர் உள்பட 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அழகுநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தில் பணிபுரிந்த 2 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்ததாக புகார்கள் வெளியானது. மேலும் அந்த பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி உள்ளனர்.

இதுபற்றி சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அழகு நிலையம் நடத்திய பெண்ணின் கணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் ஓமலூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர். முன்னதாக 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். பின்பு அவர் சேலம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதைத்தொடர்ந்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டது. பின்பு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதன்பிறகு போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது. எனினும் கொரோனா அச்சம் காரணமாக போலீசார் வெளியிலேயே அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடத்திய தெற்கு சரக உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன், டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மேலும் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 28 போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மொத்தம் உதவி கமி‌ஷனர் உள்பட 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.