சென்னை: சவுக்கு சங்கரின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் கூறிய நிலையில், சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரபல பத்திரிகையாளர் மற்றும் யுடியூபரான சவுக்கு சங்கர்   மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கோவை போலீசார் நள்ளிரவு நேரத்தில் தேனியில் கைது செய்த நிலையில், அவர்மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது. தற்போது  அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து அவர்மீது அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் கூறி வழக்குகளை தொடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் தேனியில் இருந்து கோவை அழைத்துச் சென்ற போலீஸ் வேன் விபத்துக்குள்ளானதும், அதற்கு முதலுதவி எடுக்கப்பட்டும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர்  சிறைக்கு அழைத்து வந்தபோது, அவரது கையில் கட்டுபோடப்பட்டிருந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், சவுக்கு சங்கர் தரப்பில்,  ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் நீதிமன்றகாவல் அளித்து உத்தரவிட்டது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர்  கோபாலகிருஷ்ணன் , சவுக்கு சங்கரை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை. சிறையில் வைத்து சித்ரவதை செய்ததாகவும்  அதனால் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும்,  நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை மனநலம் பாதிக்கப் பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர்  குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பெற்று தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையில், சவுக்கு சங்கரை யாரும் தாக்கவில்லை என்று என்று மறுத்துள்ள  சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், விளக்கம் அளித்துள்ளார்.  தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வந்தபோது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கி சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.