சென்னை: மாவட்ட நீதிமன்றத்தால், தள்ளுபடி செய்யப்பட்ட கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு ஆகிய 2 அமைச்சர்கள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே கையில் எடுத்து மீண்டும்  விசாரணை மேற்கொள்கிறது. ஏற்கனவே அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம் தற்போது மேலும் 2 அமைச்சர்கள்மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது பதவியில் இருந்த பல அமைச்சர்கள்மீது ஊழல் புகார்கள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் திமுக பதவிக்கு வந்ததும், முன்னாள் திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டும், நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டும் வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதுகுறித்து அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், அந்த ஊழல் வழக்கை தானாகவே மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தற்போதைய அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்,  தங்கம் தென்னரசு ஆகியோர்மீதான ஊழல் புகார்கள் தொடர்பான தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

2006ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்,  தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குறிப்பு வழக்கு பதிவு செய்தது.  இதுதொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில்,  கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மனுவை ஏற்று அவர்களை நீதிமன்றம் கடந்த ஜூலை (2023 ) மாதம் விடுவித்தது. இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்த போது,  திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வகையில் திமுக ஆட்சி நடந்த 2006 – 2011 கால கட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2012ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. இதனிடையே வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி வழக்கு தொடர்ந்தனர். அதில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தங்கள் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இதுபோலவே அப்போதைய திமுக ஆட்சிகாலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலெட்சுமி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை விருதுநகர் நீதிமன்றத்தில் நடந்தது.

தங்கம் தென்னரசு போலவே ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியும் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென மனுதாக்கல் செய்தனர். தன்னை பழிவாங்குவதற்காக புனையப்பட்ட வழக்கு இது என அவரும் மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிபதி திலகம்,
வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுத்த உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் அதிரடி காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு சீராய்வு மனுக்களையும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

முன்னதாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கையும் தானாகவே முன்வந்து ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை எடுத்திருந்தார். அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றத்தில் மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்ட நீதிபதி, அதனால்தான் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக விளக்கமும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.