ஊரடங்கால் எகிறிய மின்கட்டணம்! மின்வாரியம் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

Must read

சென்னை:

ரடங்கு காலத்தின் மின் உபயோகம் குறித்து கணக்கிடப்படாததால், மின் கட்டணம் எகிறி உள்ள நிலையில், மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக மின்வாரியம் பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஏப்ரல், மே மாதங்களில் மின் கணக்கீடு செய்யும் பணி தடைபட்டது.  ஊரடங்கால் மின் அளவைக் கணக்கிடாததால், வீட்டுப் பயன்பாட்டு மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார அளவைக் கணக்கிடும் போது, ஏற்கெனவே செலுத்திய தொகையைக் கழித்து விட்டு, மீதத் தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் மின் வாரியம் அறிவித்தது.

இதை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ஊரடங்கு காலத்தில் வீட்டு இணைப்புக்கான மின்சார அளவைக் கணக்கிடுவது குறித்த மின் வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  நான்கு மாதங்களுக்கு மொத்தமாக மின் கட்டணம் கணக்கிடுவதால் 14 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும், எனவே,  இரண்டு மாதங்களுக்குத் தனித்தனியாக பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மின் கட்டணம் கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு ஒரு வாரத்தில் விரிவான  பதிலளிக்க மின் வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

More articles

Latest article