சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து உள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதை காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில், 4வது நாளான நேற்று (ஞாயிறு) வன்முறை வெடித்தது.   மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதையடுத்து காவல்துறை தடியடி நடத்தி கலவரத்தை ஒடுக்கியது.

இதற்கிடையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில். தனது மகளின் உடற்கூராய்வு தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் தொடக்கத்திலேயே நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். “நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?, இந்த போராட்டத்தை நடத்த அனுமதித்தது யார் மாணவியின் இறப்புக்கு காரணம் என்ன, தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று எப்படிக் கூறுகிறீர்கள்? நீங்கள் என்ன இந்த துறையில் நிபுணரா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இதையடுத்து மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்முறைக்கும், உயிரிழந்த பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை  என்று விளக்கம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி,  இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட்டதுடன்,  மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மறு பிரேத பரிசோதனையின் போது மனுதாரர் தனது வழக்கறிஞருடன் இருக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…