காஞ்சிபுரம்:

ர்க்சைக்குள்ளான பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்களை அனைவரையும் திரும்ப அந்த இல்லத்துக்கே அனுப்ப வேண்டும் என கடந்த 27ந் தேதி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில்,

அந்த கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட 294 பேரில் 7 பேர் மட்டுமே கருணை இல்லத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

மற்றவர்கள் தங்களை கருணை இல்லத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும், அவர்கள் தங்களை கொடுமைப் படுத்துவர் என்றும், எங்களை கொன்று விடுவார்கள் என்று  கூறி உயிருக்கு பயந்து வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

 

பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் இல்லத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அங்கிருந்த முதியோர்களை வெளியேற்றி வில்வராயநல்லூர், பெரும்பேர்கண்டிகை ஆகிய ஊர்களில் உள்ள காப்பகங்களில் தங்கவைத்துள்ளனர். அவர்களை மீண்டும் பாலேஸ்வரத்துக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அங்குச் செல்ல முதியோர் விரும்பவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உண்மையை அறிய வழக்கறிஞர் சுந்தர மோகன் தலைமையில் உயர்நீதிமன்றம் நியமித்த குழுவினர் வில்வராய நல்லூர், பெரும்பேர் கண்டிகை காப்பகங்களில் உள்ள முதியோர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் இல்லத்தில் அடித்துக் கொடுமைப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய முதியோர், தங்களை மீண்டும் அங்கே அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், கருணை இல்லத்துக்கு திரும்ப 7 முதியவர்கள் மட்டும் விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அடுத்த கட்டமாக தொழுப்பேடு, சோழிங்கநல்லூர் பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள முதியவர்களும் விசாரணைக்குப் பின் அழைத்துவரப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.