சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் பரவல்  அதிகரிக்க தொடங்கியுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்து உள்ளார். மேலும், கண்நோய் பரவலை தடுக்க சென்னையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் மாணவ மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

சென்னையில் சமீப காலமாக டெங்கு பீவர் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை, மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயும் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்று  சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.  மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என்றவர், குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தாலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது.

அதனால், மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், பள்ளிகிளில் கண்சோதனை நடத்தப்படும் என்றவர், செப்டம்பர் 16ந்தேதி முதல் 25ந்தேதி வரை சென்னையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் மாணவ மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறியவர், அரசு, மாநகராட்சி பள்ளி மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் கண் பரிசோதனை முகாம் நடைபெறும் என்பதையும் குறிப்பிட்டார்.

முன்னதாக “மெட்ராஸ் ஐ” பரவல் பற்றின ஆய்வும்,கட்டுப்படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவமனையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.