Madhan had nothing to do with us: pariventhar
சென்னை:
ன்னிச்சையாக மோசடி செய்யும் நோக்கில் மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், எமது நிறுவனங்களுக்கும்  எந்தவித  தொடர்பும் கிடையாது  என்று டி.ஆர்.பாரிவேந்தர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர் மதன். சில படங்களை தயாரித்ததோடு, விநியோகமும் செய்து வந்தார்.  இந்த நிலையில் அவர்,  காசிக்குச் சென்று கங்கையில் சமாதி அடையப்போவதாகக் கடிதம் எழுதிவைத்து தலைமறைவாகிவிட்டார்.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

இது குறித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் எங்களது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. . அவற்றில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களும்.உண்மைக்குப் புறம்பானவை. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் ஈட்டியுள்ள நற்பெயரைக் குலைக்கும் வகையிலும், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த விளக்க அறிக்கை வெளியிடப்படுகிறது.
எஸ்.ஆர்.எம்.குழுமத்திற்கும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் மதன் என்பவருக்கும் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எவ்விதத் தொடர்பும் கிடையாது.  அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது போன்று எந்தவொரு தொகையையும், எங்களது நிறுவனத்திடமோ, நிறுவனம் சம்பந்தப்பட்ட எவரிடமோ ஒப்படைக்கவில்லை.
மாறாக, எங்களது நிறுவனத்தின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் பெற்ற பணத்தை உரியவர்களுக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றும் நோக்குடன், சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பிவிட்டு அவர் தலைமறைவாகி விட்டார். மேலும் அவர் எங்களது நிறுவனம் தவிர, வேறு சில கல்வி நிறுவனங்களிலும் இதேபோன்று மோசடி செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
மதன்
மதன்

வேந்தர் மூவிஸ் என்ற நிறுவனத்திற்கும், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தரான எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று அவரே பலமுறை தொலைக்காட்சி பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக்கட்சியைப் பொருத்தவரை, அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மதனின் திட்டமிட்ட மிரட்டல் நடவடிக்கை குறித்து கடந்த மே 29 ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல்துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாணவர் சேர்க்கை தொடர்பாக நாங்கள் ஆலோசகர்களாக யாரையும் நியமிக்கவில்லை. அனைத்து தகவல்களையும் நேரடியாக பல்கலைக்கழக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். யாரிடமும் எங்களது கல்வி நிறுவனம் நேரடியாக பணம் பெறுவதில்லை எனவும் தெளிவாக எங்களது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டு, தொடர்பு அலுவலர், தொலைபேசி எண்கள் ஆகிய தகவல்களை குறிப்பிட்டுள்ளோம்.
தன்னிச்சையாக மோசடி செய்யும் நோக்கில் மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், எமது நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். சட்டரீதியான எவ்வித விசாரணைக்கும் எங்களது முழு ஒத்துழைப்பை எப்போதும் தர தயாராக உள்ளோம்” இவ்வாறு தனது அறிக்கையில் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.