சென்னை: அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை.
இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன்வரவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீண்டும் இதே பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2 மாதம் போதிய அவகாசம் இருந்தும் இந்தப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
download
பள்ளிக்கல்வித்துறையின் இந்த தவறான செயல்பாட்டால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று  தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி தனது கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஏற்கெனவே ஜூன் 30 வரை தனி நீதிபதி காலஅவகாசம் கொடுத்துள்ளார். எனவே ஜூன் 30 வரை இப்பள்ளிகளுக்கு தற்காலிக காலநீட்டிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், “எந்த ஒரு பிரச்சினைக்கும் இயந்திர கதியில் தீர்வு காண முடியாது. 5 லட்சம் மாணவர்களின் நலன் தொடர்பான பிரச்சினை இது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு குறைபாடுகளைக் களைய உரிய தேதிக்கு முன்பாகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்கள்.