சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார்.

மாநாடு படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை SSI ப்ரொடக்ஷன் சார்பாக சுப்பையா சண்முகம் கைப்பற்றியுள்ளார்.மேலும் படத்தின் வெளிநாட்டு உரிமைகள் குறித்த தகவலையும் படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“திரையுலகிற்கும் திரைப்படம் ரசிகர்களுக்கும், வணக்கம்!

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் ‘மாநாடு’.

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவு எடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால், என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டுற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது.

சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்?

ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.

நவம்பர் 25ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது.

வெளியாகும் படங்கள் வெற்றிபெற வாழ்த்துகள் பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

– சுரேஷ் காமாட்சி