“ம.ந. கூட்டணி வேண்டாம்.. சண்முக பாண்டியன் வேண்டும்!” : விஜயகாந்திடம் தே.மு.தி.க.வின் மா.செ.க்கள் வலியுறுத்தல்

Must read

க்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்று விஜயகாந்திடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். .
தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகின்றது.
அமைப்பு ரீதியாக தேமுதிகவுக்கு உள்ள 59 மாவட்டச் செயலாளர்களில், தினமும் இருபது  பேர் வீதம் கடந்த இரு தினங்களாக நாற்பது  பேரிடம், அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.  மீதமுள்ள மாவட்டச் செய லாளர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இதையடுத்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட 102 வேட்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
download
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாவது:
“கடந்த இரு நாட்களாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 2006, 2011 சட்டப்பேரவை தேர்தல்களிலும், 2009, 2014 மக்களவைத் தேர்தல்கள் குறித்து விஜயகாந்த் கேட்டறிந்தார். அதாவது இத் தேர்தல்களில் சட்டசபை வாரியாக தேமுதிக பெற்ற வாக்குகள், தற்போது வாங்கியுள்ள வாக்குகள் குறித்தத தகவல்களை அவர் கேட்டறிந்தார்.
வாக்குகள் சரிந்ததற்கு என்ன காரணம், தொகுதிகளில்  உள்ள பிரச்சினைகள் , ஒவ்வொரு தொகுதியிலும் ரசிகர் மன்ற காலத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளின் உறுப்பினர் சேர்க்கை போன்ற விவரங்களையும் விஜயகாந்த் கேட்டறிந்தார்.
தே.மு.தி.கவில் 54 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனஆல் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பின்னடைவுக்கு காரணம் என்ன என்று மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மாவட்டச் செயலாளர்கள் பல்வேறு காரணங்களை கூறினர்.   “திமுக மற்றும் அதிமுகவினர்போல தேமுதிக தொண்டர்கள் பணபலம் கொண்டவர்களாக இல்லை. ல. தே.மு.தி.க. சார்பாக மக்களுக்காக மக்கள் பணி நிகழ்ச்சிகளை நடத்துவதுபோல, தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தொண்டர்களிடம் தலைமை நெருங்கிப் பழகி அவர்களது நிலையை அறிய வேண்டும்.
தலைமைக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு தொண்டர்கள் மீதோ, நிர்வாகிகள் மீதோ உடனடியாக தலைமை நடவடிக்கை எடுக்காமல் தீர விசாரித்து பிறகு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை கட்சி நடவடிக்கைக ளில் ஈடுபடச் செய்ய வேண்டும். மேலும் அவரை , தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. தொடரக்கூடாது. அக் கூட்டணி, தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கும்.  ஆகவே, உள்ளாட்சித் தேர்தலை தனித்தோ அல்லது பலமான வேறு கூட்டணியோடோ சந்திக்க வேண்டும்.
தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்”  என்று பல்வேறு கோரிக்கைகளை மாவட்டச் செயலாளர்கள்  விஜயகாந்திடம் தெரிவித்தனர்.
அனைத்து ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்ட விஜயகாந்த், “விரைவில் நல்ல முடிவை அறிவிக்கிறேன்” என்று தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினார்கள்..
 
 

More articles

Latest article