சென்னை: நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் மு.க.ஸ்டாலின் என்றும், வெள்ளை கொடி ஏந்திய பொம்மை வேந்தர்   இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் நெல்லையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்த முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணி சார்பில், எடப்பாடி பழனிச்சாமியும் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் காலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், மாலை அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிச்சாமி பின்னர் நெல்லை சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார்.

பின்னர், நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது,  “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. அதிமுக ஜனநாயக அமைப்பு உள்ள கட்சி. அதனால் தான் நான் இங்கு பெரிய பதவி பெற்று இருக்கிறேன். இது வேற எந்த கட்சியிலும் கிடையாது. அதிமுகவிற்கு துரோகம் செய்தால் சிறை தான் மிஞ்சும் அதற்கு எடுத்துக்காட்டு செந்தில் பாலாஜி என குறிப்பிட்டவர்,

பிரதமரோடு சிரித்து சிரித்து பேசிவிட்டு வந்த ஸ்டாலின்,  எங்களை பார்த்து முதல்வர் கள்ளக் கூட்டணி என சொல்கிறார்.  அவரது நடிப்பு   சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டது என்று விமர்சனம் செய்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு உழைப்பு பற்றி தெரியாது, அவர் ஒரு பொம்மை முதலமைச்சர். அதிமுக நாட்டு மக்களுக்காக உழைக்கும் கட்சி, திமுக கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. திமுகவின் குடும்பத்தினர் அனைவரும் அந்த கம்பெனியில் உறுப்பினராக உள்ளனர். திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. திமுகவின் வேட்பாளர்கள் அனைவரும் வாரிசுகள் அல்லது கோடீஸ்வரர்களாக தான் உள்ளனர். அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட வேட்பாளராக போட்டியிட முடியும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டாலினால் அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க  அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி வெற்றிபெற வேண்டும். தமிழ்நாட்டில், குடும்ப ஆட்சி மீண்டும் தலை தூக்கி விட்டால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதிமுக பயந்து விடும் என தமிழக முதலமைச்சர் நினைக்கிறார்.  அவரது உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் நாங்கள் பயந்தது கிடையாது. அதிமுகவில் அனைவரும் மண்வெட்டி பிடித்தவர்கள். யாருக்கும் பயப்படுப வர்கள் அல்ல. வழக்கு பதிவு செய்துவிட்டால் அதிமுகவை அழித்து விடலாம் என ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். வீட்டுக்குள் இருந்து கொண்டு எதுவும் தெரியாத திறனற்ற முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.

ஒரு காலத்தில் மன்னர்கள் வீட்டில் இருந்து கொண்டு நாட்டில் நடப்பதை அமைச்சர்களிடம் விசாரிப்பார்கள். அதேபோல் வீட்டில் இருந்து கொண்டு அமைச்சர்களிடம் நாட்டில் நடப்பது குறித்து முதலமைச்சர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.  மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளை கொடி ஏந்திய பொம்மை வேந்தர் என்ற பட்டத்தை கொடுக்கலாம் என்றும் கூறினார்.

எங்கள் கூட்டணியை ஸ்டாலின் கள்ளக் கூட்டணி என சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் வைத்துள்ளது தான் கள்ளக் கூட்டணி. பிரதமரோடு சிரித்து சிரித்து பேசிவிட்டு எங்களை கள்ளக் கூட்டணி எனச் சொல்லும் ஸ்டாலின் நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சி விட்டார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்து கொண்டு எதை பேச வேண்டும் என தெரியாமல் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பேசினார்.