பெங்களூரு: சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தொடர்பான வழக்கில் வரும் 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்போதைய சிறைத்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ் பரபரப்பு வீடியோ வெளியிட்டு, விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இந்த விவகாரம், அப்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த சசிகலா,  அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் சசிகலா மீதான வழக்கில் 4 ஆண்டுகள் ஆகியும், ஊழல் தடுப்பு படை போலீசார் இதுவரை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.

இதையடுத்து, சென்னையை சேர்ந்த கீதா என்பவர், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். அதில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கு விசாரணையை ஊழல் தடுப்பு படை போலீசார் தாமதமாக விசாரித்து வருவதாகவும், இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் சில மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாவதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் காலஅவகாசம் வழங்க முடியாது. அதனால் வருகிற 25-ந் தேதிக்குள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.