மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரண்டு இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை குறித்து துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கடிந்துகொண்டார்.

இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது குடியரசு தலைவரை அவமதிக்கும் செயல் என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் இடத்தில் இருந்து டெல்லி முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசு சார்பாக முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா லால்பகதூர் சாஸ்திரி நினைவிடமான விஜய் காட் பகுதிக்கு வந்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சிறிது நேரம் செயலற்ற நிலையில் இருந்துவிட்டு ஜனாதிபதி வருகைக்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வரின் இந்த செயல் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் இவ்விரு நிகழ்ச்சியிலும் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளாதது வன்மையான கண்டனத்துக்கு உரியது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 2 ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் இருந்ததாகவும் அதற்கு முன் தினம் குஜராத்தில் பிரதமர் கலந்து பொதுக்கூட்டத்திற்கு காலியான சேர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், கெஜ்ரிவால் கூட்டத்திற்கு மக்கள் திரளாக கலந்து கொண்டதே சக்சேனாவின் இந்த கடிதத்திற்கு காரணம் என்று டெல்லி ஆம் ஆத்மி கூறிவருகிறது.