சென்னை:
வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.100 அதிகரித்து டெல்லியில் ரூ.2355.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.
அத்துடன் தற்போது, ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வு மூலம், இன்று முதல் டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.2355.50 ஆக உள்ளது. அதே சமயம், கொல்கத்தாவில் ரூ.2351க்கு பதிலாக ரூ.2455, மும்பையில் ரூ.2205க்கு பதிலாக ரூ.2307க்கு விற்கப்படுகிறது. அதேசமயம் சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2406ல் இருந்து ரூ.2508 ஆக உயர்ந்துள்ளது.