சேலம்: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள வடகுமரை ஊராட்சியை சேர்ந்த கணேசன் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (வயது 20), இவர் நீட் தேர்வை எழுதிய நிலையில், தற்போது வெளியான தேர்ச்சி முடிவில் குறைந்த மதிப்பெண் கிடைத்துள்ளது. இதனால் மணமுடைந்த மாணவர் கடந்த 2 ஆம் தேதி காலை களைக்கொல்லி பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரது பெற்றோர் அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், மாணவர் சுபாஷ்சந்திரபோஸ் சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தலைவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் வடகுமரை ஊராட்சியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே செப்டம்பர் 1ந்தேதி நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
‘https://patrikai.com/one-tn-student-dies-of-suicide-due-to-neet/