ரூ. 25கோடி அதிகம்: தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை…

Must read

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.25 கோடி அதிகம் .

தீபாவளி பண்டிகையையொட்டி, நடப்பாண்டு அரசுத்துறை நிறுவனங்கள் ஆவினில் இனிப்பு வாங்க தமிழகஅரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, ஆவின் நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள நெய், வெண்ணெய், பால் பவுடர் போன்றவற்றின் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஆவின் நிறுவனத்தின் பிரத்யேக இனிப்புகள் மட்டுமின்றி, ஐந்து புதிய இனிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இது தொடர்பாக,  ஆவினில் இனிப்புகளை வாங்கும்படி, அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும், தலைமை செயலர் இறையன்பும் கடிதம் எழுதி வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து ஆவினில் இந்த ஆண்டு இனிப்பு வகைகள் மற்றும் நெய் போன்றவை விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி 900 டன் நெய்; 400 டன் இனிப்புகள் உட்பட 82.4 கோடி ரூபாய் அளவிற்கு ஆவின் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டு விற்பனை 100 கோடியை எட்டும் என, ஆவின் அதிகாரிகள்  எதிர்பார்த்த நிலையில், சற்றே குறைந்துள்ளதாகவும், கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டு  தீபாவளியின் போது,  57.2 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடைபெற்றதாகவும். கடந்த ஆண்டைவிட ரூ.25 கோடி அதிகம் விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article