சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்யும் எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுவரை சராரி மழையை விட 3 சதவிகிதம் குறைவாகவே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. இதைத்தொடர்நது. தமிழகத்தில் கடும் குளிர் வாட்டி வதைத்து வந்தது. குளிர் வந்ததால் மழைக்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் மழை குறித்து வானிலை மையம், வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 9ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே இன்று மற்றும் நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிசம்பர் 8ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]