சென்னை: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.1368 கோடி நன்கொடை வழங்கிய கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம், அதில் ரூ.509 கோடியை, மாநில கட்சியான திமுகவுக்கு வழங்கி உள்ளது.

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இனிமேல் தேர்தல் பத்திரம் செல்லாது, அவற்றைப் பயன்படுத்தி இனி நன்கொடை எதுவும் வழங்க கூடாது என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தொடர்ந்து, உச்சநீதி மன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் 15 ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும், அக்கட்சிகளுக்கு அந்த நன்கொடைகளை வழங்கியவர்களுடைய விபரங்கள் உள்ளிட்டவற்றை பொதுவெளியில் வெளியிட உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்ட்டின் நிறுவனம் அளித்துள்ள நன்கொடைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது, ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1368 கோடி நன்கொடை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 509 கோடி தமிழ்நாட்டில் உள்ள திமுகவுக்கு வழங்கி உள்ளது. அதாவது, அவர் அளித்த நன்கொடையில், சுமார் 40 சதவிகிதம் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளதில், பாஜக உள்பட பல கட்சிகளுக்கு நிதி வழங்கி உள்ளது.
லாட்டரி அதிபரான மார்ட்டின் ஏற்கனவே மறைந்த முதல்வர் கருணாநிதியை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து, அவருக்கு நெருக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது தேர்தல் பத்திரம் மூலம் பெரு நிறுவனங்களுக்கு இணையாக திமுகவுக்கு நிதி வாரி வழங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவிற்கு நன்கொடை வழங்கியவர்களில் அதிகபட்சமாக நன்கொடை வழங்கியது லாட்டரி மார்ட்டின் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக திமுகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 656 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் சுமார் ரூ. 509 கோடியை Future Gaming and Hotel Services என்ற நிறுவனம் திமுகவிற்கு வழங்கியுள்ளது. அது மார்டினுக்கு சொந்தமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அதிமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 கோடியை திரட்டிய நிலையில், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மட்டும் ரூ. 5 கோடி வழங்கப்பட்டு உள்ளதும் கண்டறியப்பட்டது.
திமுகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்கள் விவரம்:
- லாட்டரி அதிபர் மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் 509 கோடி வழங்கி உள்ளது.
- மேகா இன்பிராஸ்ட்ரக்சர் 105 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
- இந்தியா சிமெண்ட்ஸ் 14 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- கலாநிதி மாறனின் சன் டிவி 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- திருவேணி நிறுவனம் 8 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- ராம்கோ சிமெண்ட் 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
- ஐ ஆர் பி 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
- எல் எம் டபிள்யூ 1.5 (ஒன்றரை)கோடி கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- அப்போலோ ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது
- பிர்லா குரூப் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது
முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ. 6,060 கோடியை பாஜக திரட்டியிருக்கிறது. குறிப்பாக, அதில் 2019-20 காலகட்டத்தில் மட்டும் ரூ.2,555 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டுள்ளது. திரிணாமுல் ரூ.1,610 கோடியும், காங்கிரஸ் ரூ.1,422 கோடியும் தேர்தல் பத்திரங்கள் திரட்டியுள்ளது. இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்ற பாஜக எவ்வளவு தொகையை யாரிடம் இருந்து பெற்றுள்ளது என தகவல் வெளியாகவில்லை.
[youtube-feed feed=1]