சென்னை: தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா ? ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாநில அரசின் வருவாயை  பெருக்கும் நோக்கில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த லாட்டரியை மீண்டும் கொண்டு வர யோசிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் மறைந்த முன்னாள் கருணாநிதி அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தையும் சீரழித்தார். அப்போதுதான் வெளி மாநில லாட்டரிகள் தமிழ் நாட்டில் அனுமதிக்கப்பட்டது.

ஒரு சீட்டின் விலை ரூ.10 என்றும் பரிசு ஒரு கோடி ரூபாய் எனவும் மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது. இதன் காரணமாக, குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. தனியார் லாட்டரி ஏஜெண்ட்டுகள், வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை, கள்ள நோட்டு அச்சடிப்பது போல் அச்சிட்டு மக்களிடம் விற்றார்கள்.

ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஏழை, எளிய மக்கள், லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும், வாழ்வையும் இழந்தார்கள். இந்தத் தீமை, சமுதாயத்தில் புரையோடிப் போய் பல ஆண்டுகள் நம் மக்களை சீரழித்தது. பல்வேறு காலக்கட்டங்களில் தனியார் லாட்டரியால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நிகழ்ந்தது.

எம்ஜிஆருக்கு பிறகு இரண்டாவது முறையாக 2001-ல் ஆட்சி அமைத்த பின், லாட்டரி கொள்ளையரின் பிடியில் இருந்து மக்களைக் காக்க முடிவு செய்தார்கள். அதன்படி, 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒரே கையெழுத்தில் ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே சாரும்.

இந்தச் சட்டத்திற்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றும் தோல்வியைச் சந்தித்தார்கள். அம்மாவின் ஆட்சியில், ஏழை, எளிய மக்கள், பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கனின் பிடியில் இருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட, சந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான, இந்த லாட்டரி சீட்டு திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயைப் பெருக்க வேறு பல நல்ல வழிகளைத் தேட வேண்டும்.

தமிழகத்தின் ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால், தமிழ் நாட்டு மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். எனவே, லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என்று கழகத்தின் சார்பில் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.