டில்லி

விதி எண் 370 ஐ நீக்குவதற்காக மோடி அரசு ஏராளமான தளவாடங்கள் மற்றும் 35000 வீரர்களை பயன்படுத்தி உள்ளது.

நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் விதி எண் 35 ஏ ஆகியவற்றை நீக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறபட்டுளது. இவை அனைத்தும் சுமார் 8 மணி நேரக் காலகட்டத்தில் நடந்தது. இந்த நிகழ்வின்  பின் விளைவுகளை தடுக்க அரசு சார்பில் 2000 சாட்டிலைட் தொலைப்பேசிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் 35000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று முதல் காஷ்மீரில்  முகாமிட்டுள்ளார். ஆனால் இந்த 8 மணி நேர பணிக்கான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் பல நாட்கள் முன்பே தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி அன்று ஆய்வு மற்றும் ஆராய்ச்சி துறைத் தலைவர் சமந்த் கோயல் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு பிரதமருடன் பேசி உள்ளார். அப்போது அவர் காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் காஷ்மீரை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அரசு  அமெரிக்க உதவியைக் காஷ்மீர் விவகாரத்ஹ்டில் கோர உள்ளதாக அவருடைய தகவலில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான தாலிபன்களை பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் அதற்கு பதிலாகக் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் கோயல் எச்சரித்தார்.

இது குறித்து இந்திய அரசு ஏற்கனவே அறிந்திருந்தது. அதற்கேற்ப ஜூலை 22 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றார். அங்கு ஆப்கானிஸ்தான் பற்றி அவரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் தாம்  மத்தியஸ்தம் செய்ய உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதற்கு வெகு நாட்கள் முன்பே விதி எண் 370 மற்றும் விதி எண் 35ஏ ஆகியவற்றை நீக்குவது குறித்து சட்ட வல்லுனர்கள் மூலம் பாஜக ஆராய்ச்சி நடத்தி உள்ளது.

மூத்த பாஜக தலைவர்கள் பலர் இந்த நடவடிக்கைகள் மக்களவை தேர்தலுக்கு முன்பே தொடங்கி விட்டதாகவும் அதையொட்டி பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் விதி எண் 370 ஐ நீக்குவது பற்றித் தெரிவித்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.  மேலும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை நீக்க வேண்டும் எனபல நாட்களாக ஆர் எஸ் எஸ் இயக்கம் பாஜகவைக் கேட்டுக் கொண்டிருந்தது. மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் பாஜக இது குறித்து முடிவு எடுக்காமல் அப்போது தள்ளிப்போட்டது.

கடந்த 10 நாட்களாகச் சிறிது சிறிதாக 2000 சாட்டிலைட் தொலைப்பேசிகள் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன. மாநில அரசு இணையச் சேவைகள் மற்றும் தொலைபேசி சேவைகளை நிறுத்தக்கூடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதைப் போலவே நேற்று முன் தினம் இணையச் சேவை நிறுத்தப்பட்டது. அதைத்  தொடர்ந்து மொபைல் மற்றும் தொலைபேசி சேவைகளும் நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் 35000 எல்லைப்பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

விதி எண் 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டால் மாநிலத்தில் குழப்பம் ஏற்படும் என்னும் ஐயத்தினால் அமர்நாத் யாத்திரை இடையில் நிறுத்தப்பட்டது. யாத்திரிகர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட  வெளி மாநிலத்தவர் அனைவரும் அவரவர் இருப்பிடத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்த இரு விதிகளும் நீக்கப்படுவதையொட்டி மாநிலம் எங்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.