கொல்கத்தா:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மசோதாவை ஆதரிக்க முடியாது என்று ஆவேசமாக கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தை  2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மத்தியஅரசின் இந்த முடிவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி.  இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது. இந்த மசோதாவுக்கு நாங்கள் வாக்களிக்க முடியாது. இந்த மசோதா கொண்டு வருவதற்கு முன்பு மத்திய ஆட்சியாளர்கள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் காஷ்மீரிகளுடனும் பேசியிருக்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில்  நீங்கள் ஒரு நிரந்தர தீர்வுக்கு வர வேண்டும் என்றால், நீங்கள் அனைத்து பங்குதாரர்களிடமும் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி: ஃபாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்படக்கூடாது என்று நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஜனநாயக நிறுவனங்களின் நலனுக்காக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மம்தா கூறி உள்ளார்.