சென்னை

நேற்று ரூ.2000 நோட்டுக்களை சென்னை ரிசர்வ் வங்கியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாற்றி உள்ளனர்,

கடந்த 19ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இவற்றை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

எனவே கடந்த 23ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 8 ஆயிரம் வங்கி கிளைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.  ரூ. 2000 நோட்டை மாற்ற கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று வரை எதிர்பார்த்த அளவுக்கு நேற்று வரை கூட்டம் வரவில்லை. மாறாக வழக்கமாக வங்கிகளுக்கு வருபவர்களின் கூட்டமே வங்கிகளில் காணப்பட்டு வருகிறது. ஒரு சில வங்கிகளில் மட்டும் 2 ஆயிரம் நோட்டை மாற்ற சற்று கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

மேலும் கெடு விதிக்கப்பட்டுள்ள கடைசி ஒரு வாரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக வங்கிகளில் ஒருவருக்கு பத்து 2 ஆயிரம் நோட்டுக்கள் மட்டுமே ஒரே நேரத்தில் மாற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைவிட பணத்தை வைத்துள்ளவர்கள் பான்கார்டு எண்ணை காண்பித்து வங்கிகளில் டெபாசிட் தான் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

நேற்று ஏராளமானோர் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றி சென்றனர். எல்லா வங்கிகளிலும் ரூபாய் நோட்டு மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டம் காணப்படாத நிலையில், நிறைய பேர் பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி முன்பு குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.