கும்பகோணம்
கும்பகோணத்தை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் வீட்டில் தோண்டத் தோண்ட ஏராளமான எலும்புகள் கிடைத்துள்ளன.
கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி. ஒரு போலி சித்த மருத்துவராவார்., கடந்த 13ம் தேதி தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் அசோக் ராஜ் என்பவருக்கு இவர் போதை மருந்து கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் புதைத்தது தெரியவந்தது.
எனவே காவல்துறையினர் கேசவ மூர்த்தியைக் கைது செய்து நடத்திய விசாரணையில், அசோக் ராஜைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி நுரையீரல், கல்லீரலை வீட்டிலேயே மசாலா சேர்த்துச் சமைத்து சாப்பிட்டுள்ளது தெரிய வந்தது. கடந்த, 2021 நவம்பர் 27ம் தேதி மாயமான அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது அனஸ்(26) என்பவரையும் கொலை செய்து உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி வீட்டின் கொல்லைப்புறத்தில் புதைத்தும், குறிப்பிட்ட பாகங்களைச் சமைத்துச் சாப்பிட்டதும் தெரியவந்தது.
இதுவரை முகமது அனஸ் உடல் மீட்கப்படாத நிலையில் கேசவ மூர்த்தி இதேபோல் பலரை கொலை செய்திருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். சோழபுரத்தில் உள்ள கேசவ மூர்த்தி வீட்டில் கைரேகை நிபுணர் ஏடிஎஸ்பி ஹேமா மற்றும் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராமச்சந்திரன் முன்னிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் நேற்று காலை 11 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொக்லைன் உதவியுடன் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரங்கள், வீட்டின் முன் பகுதியில் உள்ள மூலிகைச்செடி, வாழை மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட போது 2 இடங்களிலும் 3 அடி அளவுக்கு பள்ளம் தோண்டியபோது விரல் அளவில் 30க்கும் மேற்பட்ட எலும்புத் துண்டுகள் கிடைத்தன.
கேசவ மூர்த்தி வீட்டுக்குள்ளும் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அங்கு இருந்த மருந்து, மாத்திரை, மூலிகைப் பொடிகள், பெண்கள் பயன்படுத்தும் அலங்கார கவரிங் நகைகள், நைட்டி, ஆடைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட எலும்புகளைச் சேகரித்து 10 அட்டை பெட்டிகளில் தஞ்சை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்த அங்கு கேசவ மூர்த்தி வீட்டில் கிடைத்த எலும்புகள் மனித எலும்புகளா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.