டெல்லி: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி நீக்கப்பட்டதன் மூலம், ஓட்டுநர்கள் பற்றாக்குறை நீங்கும் என்று தமிழ்நாடு லாரி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 8ம் வகுப்பு கல்வித்தகுதி என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக, 6 லட்சம் சரக்கு வாகனங்களும், பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால், 4 லட்சம் ஓட்டுநர்களே இருக்கின்றனர்.
இந் நிலையில் 8ம் வகுப்பு கல்வித்தகுதி ரத்தால், ஓட்டுநர்கள் பற்றாக்குறை களையப்படும் என்று தமிழ்நாடு லாரி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு செயலாளர் தன்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து,அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த கணேஷ் கூறுகையில், கல்வித்தகுதி என்ற கோணத்தில் சாலை விதிகளையும், அது தொடர்பான குறியீடுகளையும் அணுக வேண்டியதில்லை என்றார்.
முறையான கல்வித்தகுதி பெற்றவர்கள் சரியாக வாகனத்தை இயக்குகிறார்களா என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்பட வில்லை.
8ம் வகுப்புக்கு குறைவான கல்வித்தகுதி கொண்ட ஓட்டுநர்களால் தமிழகத்தில் 11 சதவீதத்துக்கும் (7,700)குறைவான விபத்துகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், அதைவிட கூடுதல் படிப்பு படித்தவர்களால் 60,000 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.