வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் முன்பு அமைந்துள்ள நான்கு கால் கற்தூண் மண்டபம் லாரி மோதியதால் இடிந்து விழுந்தது. இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாழப்பாடி அருகே பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், மூலவராக தான்தோன்றீஸ்வரரும், அறம் வளர்த்த அம்மை என்ற பெயரில் அம்மன் அருள்பாலித்து வருகின்றனர். பிரதோசம், சங்கடஹரசதுர்த்தி, காலபைரவர், குரு பகவான் பூஜை மற்றும் ஆடி வெள்ளி ஆடி 18 ஆடி அமாவாசை பூஜைகள் பிரசித்தி பெற்றதாகும்.
பழமையான இந்த கோவிலின் முன்பு வெளிப் பிரகாரத்தில் பழமையான நான்குக்கால் கற்தூண் மண்டபம் இருந்தது. கற்தூண்களால் கட்டப்பட்ட பழமையான கற்றளி நான்குக்கால் கற்தூண் கொண்ட இந்த மண்டபம் மீது நேற்று நள்ளிரவு லாரி மோதியதில் இடிந்து விழுந்தது.
கல்வராயன் மலை கருமந்துறையில் இருந்து நீர்முள்ளிக்குட்டை நோக்கி சென்ற லாரி, கட்டுப் பாட்டை இழந்து கோவில் முகப்பில் உள்ள 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நான்குக்கால் கற்தூண் மண்டபம் மீது மோதியது. இந்த விபத்தில் நான்குக்கால் கற்தூண் மண்டபம் முழுவதும் சரிந்து விழுந்தது.
விபத்துக்கு காரணமான லாரி, கோவில் திருமண மண்டபத்தின் மோதி நின்றது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் , விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து மிகுந்த சேலம் அயோத்தியபட்டினம்- கல்வராயன் மலை சாலையில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு அருகில், சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் பல ஆண்டு காலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததே, இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.