மதுரை: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெறும் மதுரை சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த விழாவைக்கான லட்சக்கணக்கானோர் மதுரையில் திரண்டுள்ளதால், மதுரை மாநகரமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆனால், காவல்துறையின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், பல இடங்களில் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியான சோகமும் பலர் காயமடைந்துள்ள அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தகதகக்கும் தங்கக்குதிரையில் கம்பீரமாக வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். முன்னதாக நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் கள்ளழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் தங்கப்பல்லக்கில் கொண்டுவரப்பட்டு மதுரையில் தங்கிய நிலையில், இன்று காலை பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார். அழகர் பச்சை பட்டு உத்தினால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.
வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரைவாகனத்தில் ஏறி வந்த கள்ளழகரை வெள்ளிக்குதிரை மீதேரி வந்த வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அதன் பின்பு, 6 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார்/ இந்த அரிய காட்சியைப் பார்க்க அங்குத் திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, பூக்களைத் தூவியும், அடித்தும் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டும் பரவசமடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியை காண தென்மாவட்டம் மற்றும் நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்து, கள்ளழகரை தரிசித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியும் என்றாலும், இந்த வருடம் சரியான முறையில் பாதுகாப்பு போடப்படவில்லை, பக்கதர்களை ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் முன்வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், பல இடங்களில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
வைகை ஆறு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், கூட்ட நெரிசை கட்டுப்படுத்தி, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த இருவரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் காவல்துறையினரின் மெத்தனத்தால்தான் இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வருத்தம் தெரிவித்தனர். சம்பவத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.