சென்னை:

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  கொள்ளையன் முருகனிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டு உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் சுவரில் துளைபோட்டு சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருவாரூர் அருகே மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது, திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் என்பது தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன் உள்பட கொள்ளைக் கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப் பட்டிருந்த நிலையில்,  முருகனின் உறவினரான மணிகண்டனும், மற்றொரு கொள்ளையனும், முருகனின் அக்காள் மகன் சுரேஷ் என்பவனின் தாய் கனகவள்ளியும் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் நெருக்குதலைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததும்,  கொள்ளையன் முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.

முருகனை காவலில் எடுத்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்  திருச்சி மற்றும் பெரம்பலூரில் பதுக்கி வைத்திருப்பதாக முருகன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து முருகனை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்த கர்நாடக போலீசார், திருச்சி மற்றும் பெரம்பலூரில் முருகன் சொன்ன இடங்களில் எல்லாம் சோதனை நடத்தி நகைகளை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி யுள்ளது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த திருச்சி போலீசார்,  கர்நாடக போலீசாரின் காரை மறித்து விசாரணை மேற்கொண்டதாகவும், அப்போது கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்து விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதில், கர்நாடக காவல்துறையினர் கைப்பற்றிய நகைகள், திருச்சி ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரிய வந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.