சென்னை:

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல மத்திய அரசு தடை விதித்து லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது,  ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் தொடர்பான விவகாரத்தில்,  சட்ட விரோதமாக பணம் கைமாறியதாக ப.சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது.

சிபிஐ விசாரணைக்கு, கார்த்தி சிதம்பரம் ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.  ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என  சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிதிபதிகள், 2 நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என்று தீர்ப்பு கூறினர்.

மேலும்,  வழக்கு நிலுவையில் உள்ளது என்ற காரணத்திற்காக, மனுதாரரின்  உரிமையை பறிக்க முடியாது என்ற நீதிபதிகள்,  நாளை முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரையிலான கார்த்தி சிதம்பரத்தின் பயணத்திட்டத்திற்கு அனுமதி அளித்தனர்.

மேலும், தனது பயணத்திட்டம் தொடர்பான முழு  தகவல்களையும் சி.பி.ஐ.க்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆனால், லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய மறுத்த உயர்நீதி மன்றம்,  அந்த  வழக்கின் விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.