சென்னை: தடாலடி பேச்சுக்கு பேர்போன நாம் தமிழர் கட்சி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலுத்ம தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளது. பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடுடன், 40 தொகுதிகளிலும் களமிறங்குவோம் என அறிவித்து உள்ளார். இதனால் தமிழ்நாட்டில் 4முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் கூட்டணி பேரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், மநீம உடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல பாமக, தேமுதிக போன்ற கட்சிகள், அதிமுகவில் சேருமா அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியில் சேருமா என்பது தெரியவில்லை. இதுதொடர்பான திரைமறைவு பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நாம் தமிழர், தங்களது கூட்டணியில் சேர இழுக்க அதிமுக முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாயின. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் சீமானிடம் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கூட்டணி சேரப்போவதாக தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள். ஒருவேளை அது போன்ற தகவலை பரப்புபவர்கள் எங்களுக்காக பேசிக்கொண்டிருக்கிறார்களோ? என்னவோ தெரியவில்லை என்று கூறி அதிமுக கூட்டணி என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து பேசியவர், நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் விரைவில் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளேன் என்றவர், எங்களின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதில் முடிவு கிடைத்தவுடன் தேர்தல் பணிகளில் விரைவாக ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சீமான் அறிவிப்பால் தமிழ்நாட்டில் 4முனை போட்டி உருவாகி உள்ளது. ஏற்கனவே திமுக அணி, அதிமுக அணி, பாஜக அணி என 3 அணிகள் உள்ள நிலையில், தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் 4 அணிகள் உருவாகி உள்ளன. இதனால் வாக்குகள் சிதறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.