சென்னை:

திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைசிறுதை கட்சிக்கு   2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்று தொல் திருமாவளவன் அறிவித்தார். மேலும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆந்திரா, கேரளாவிலும் போட்டியிடுகிறது என்றும் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,  சிதம்பரம் தொகுதியில்  நானும் (தொல். திருமாவளவன்) , மற்றொரு தொகுதியான  விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார் என்று கூறினார். மேலும், தாம் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக  கூறியவர், பொதுச் செய லாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றார்.

தேர்தலில் தங்களது கட்சிக்கு, மோதிரம், வைரம், பலாப்பழம் போன்ற சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டு உள்ளது, ஆனால், தற்போது வரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. இது  சந்தேகத்தை ஏற்படுத்து கிறது என்றார்.

விடுதலை சிறுத்தைக் கட்சி ஆந்திரா மற்றும் கேரளாவில் போட்டியிடுவதாக கூறியவர், அங்கு  வேட்பாளர்களை  அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.  ஆந்திராவில் குண்டூர், சித்தூர், விசாகப்பட்டினம், திருப்பதி, ராஜம்பெட், கடப்பா ஆகிய 6 தொகுதி களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்றவர்,  கேரளாவில் இடுக்கி, கோட்டயம், கொல்லம் ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து திமுக தலைமையகம்  அண்ணா அறிவாலயம் சென்ற திருமாவளவனும், ரவிக்குமாரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.