டெல்லி: பாராளுமன்றத்தில் இனிமேல், இதுபோன்ற தரக்குறைவான கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ள மக்களவை செயலகம் , அந்த வார்த்தைகள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவை விவாதத்தின்போது, பப்பு, ஃபேகு, மாமு அல்லது பந்ததார் போன்ற ‘இழிவான வார்த்தைகளை’  பயன்படுத்தக்கூடாது என்றும், உறுப்பினர்களின் கண்ணியத்தைத்தவிர, சபையின் அலங்காரத்தையும் நாம் பராமரிக்க வேண்டும் அவைத்தலைவர் கூறியதுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 105(2) பிரிவின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்த முடியாத வார்த்தைகளின் பட்டியலைத் தயாரித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12ம் தேதி வரை நடைபெறும் என பாராளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. இந்த தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்லஇ, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், ‘Jumlajeevi’, ‘Taanashah’, ‘Nautanki’ (‘ஜூம்லஜீவி’, ‘தனஷா’, ‘நௌதாங்கி’) உள்பட ஏராளமான வார்த்தைகள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுபோன்ற வார்த்தைகளை உறுப்பனிர்கள் பயன்படுத்தினால், அந்த வார்த்தைகள் சபை தலைவவரால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனால் நடைபெற இருக்கும் கூட்டத்தொடர் பரபரக்கும் என்பதில் ஐயமில்லை.