சென்னை: மக்களவை தேர்தல் 2024 ஒட்டி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவானது மாலை 6மணி வரை நடைபெறுகிறது. வெயில் காலம் என்பதால் அதிகாலையிலேயே ஏராளமானோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்த தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19ந்தேதி) நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
முதற்கட்ட தேர்தலானது தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, கேரளா மற்றும் உள்பட உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடை பெறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் 17ந்தேதி மாலை 6மணியடன் நிறைவேற்றது.
தமிழகத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், இதற்காக 68,321 ஓட்டுச்சாவடிகள் தயாராக இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 6.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதிப்பெற்றுள்ளனர். 6 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு வந்து வரிசையில் இருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக தமிழகம் முழுவதும் 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 44,801 ஓட்டுப்பதிவு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்குபதிவு முடிந்ததும், ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக எடுத்துச்சென்று வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்படும். மாநிலம் முழுவதும் வாக்குகளை எண்ண, 39 இடங்களில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதுவரை 4,861 தேர்தல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.173.85 கோடி பணம், ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வெயில் காலம் என்பதால் அதிகாலையிலேயே ஏராளமானோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்த தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.