சென்னை: லோக்சபா தேர்தலையொடட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருச்சியில்  தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், “மலைக்கோட்டை மாநகரில் எனது பரப்புரையைத் தொடங்குகிறேன். டெல்லி செங்கோட்டையை இண்டியா கூட்டணி பிடிப்பதில், இது நிறைவடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு திருச்சி அல்லது தஞ்சாவூரில் முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை ( மார்ச் 23 ) திருவாரூர் செல்லும் முதல்வர், கொரடாச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர், நாகை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து திருச்சி வரும் முதல்வர், விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

முன்னதாக திமுக தலைமை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் தொடர்பான அறிவிப்பில், மக்களவைத் தேர்தலுக்கான 20 நாட்கள் பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22ந்தேதி தொடங்குவதாக தெரிவித்துஉள்ளது.

தமிழகம் முழுவதும் ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியை வரும் 22-ம் தேதி (இன்று) தொடங்கு கிறார்.

அதன்படி, வரும் 22-ம் தேதி திருச்சி, பெரம்பலூர், 23-ல் தஞ்சை, நாகை, 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, 26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், 27-ல் தென்காசி, விருதுநகர், 29-ல் தருமபுரி, கிருஷ்ணகிரி, 30-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, 31-ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 2-ம் தேதி வேலூர், அரக்கோணம், 3-ல் திருவண்ணாமலை, ஆரணி, 5-ல் கடலூர், விழுப்புரம், 6-ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, 7-ம் தேதி புதுச்சேரி, 9-ம் தேதி மதுரை, சிவகங்கை, 10-ம் தேதி தேனி, திண்டுக்கல், 12-ல் திருப்பூர், நீலகிரி, 13-ல் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார்.

 ஏப்ரல் 15-ம் தேதி திருவள்ளூர், வடசென்னை, 16-ல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 17-ம் தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.

முதல்வர் பிரச்சாரத்துக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டியுள்ளதால், வழியில் வேறு எவ்வித நிகழ்ழ்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.