டெல்லி: மக்களவை தேர்தல் எதிரொலியாக, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் இன்றுமுதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுங்க கட்டண உயர்வு முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது .
நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆண்டு இரண்டு முறை சுங்கக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சுங்க சாவடி கட்டணங்களுக்கு நாடு முழுவதும் தொடர்ச்சியாக எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் திமுக உள்பட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கட்கரி, பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், மத்தியஅரசு, இதை செயல்படுத்தாமல் தொடர்ந்த சங்கக்கட்டணங்களை உயர்த்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், இன்று (ஏப்ரல் 1ந்தேதி) முதல், 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் திண்டிவனம்-ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புத்தூர், பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்பட வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சுங்கக் கட்டண உயர்வுக்கு கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
மேலும், தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருவதால், சுங்கக்கட்டணம் உயர்வு தேர்தலில் எதிரொலிக்கும் என பயந்த மத்திய பாஜக அரசு முடிவு முடிவு, நாடு முழுவதும் இன்று உயர்த்தப்பட்ட இருந்த சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரலாம், அல்லது அடுத்த முறை கூடுதலாக கட்டண உயர்வு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.